அரிசி ஆலை வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு!
அரிசி ஆலை வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு அத்தியா வசிய உணவு பொருள்களான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நேற்று அரிசி ஆலையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 200 அரிசி மொத்த வியாபார நிறுவனத்தினர், சில்லரை வியாபார கடைகள், 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இது குறித்து திருச்சி மாநகர் அரிசி மொத்த வியாபாரி சங்க தலைவர் கேசவன் கூறியதாவது:- மத்திய அரசு அரிசியின் மீது 5 சதவீத வரியை விதிக்கும் பட்சத்தில், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, ரூ.3 முதல் ரூ.5 வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். மத்திய அரசு அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இணைந்து, நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 500 டன் அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலை நம்பி உள்ள 5 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.