குடிபோதையில் நண்பனுக்கு கத்திக்குத்து; உயிர் ஊசல்
மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தீபன்ராஜ்(25). இதேபோல் மண்ணச்சநல்லூர் முதலியார் சந்து பகுதியை சேர்ந்தவர் பிச்சை என்பவர் மகன் சதீஷ்குமார்(34). இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏதோ வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், தீபன்ராஜ் அவரது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது சதீஷ்குமார் திடீரென வீட்டிற்குள் சென்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபன்ராஜ் வயிற்றில் குத்தியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபன்ராஜ் நண்பர்கள் சதீஷ்குமாரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.