துறையூர் அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்
திருச்சி துறையூர் அருகே கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை விற்பனை செய்து வந்த கடையில் அதிரடியாக சோதனை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் – 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் …
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.
சவர்மா மற்றும் கெட்டுப்போன கோழிக்கறி இறைச்சிகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் துறையூர் அருகே ஆட்டு இறைச்சிக் கடையில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு அருகில் உள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவர் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை வைத்திருப்பது தெரியவந்தது.
சுமார் 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரி மூர்த்தி,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரங்கநாதன் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர் சுரேஷ் மீது அபராதம் விதிக்கப்பட்டதோடு மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – இதுப்போன்ற கெட்டுப்போன இறைச்சிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.