காட்டுப்புத்தூரை அடுத்த எம்.புத்தூர் பகுதியில் காவிரி ஆற்று மணல் இருசக்கர வாகனங்களில் கடத்தி செல்லப்படுவதாக தொட்டியம் வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காரைக்காடு கிராம நிர்வாக அலுவலர் கோமதி எம்.புத்தூர் மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக நான்கு இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை கொண்டு வந்த நபர்களை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு மணல் கடத்தி வந்தவர்கள் தப்பியோடினர்.
இதனையடுத்து 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 12 மணல் மூட்டையினை பறிமுதல் செய்து காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.