சிறப்பு முகாமிலிருந்து இலங்கை அகதி தப்பியோட்டம்
திருச்சி, ஜூலை 23 திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கையைச் சேந்த அப்துல் ரியாஸ்கான் என்பவர் நேற்று காலை தனது அறையிலிருந்த ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதே போல் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (55) என்பவர், பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிச் சென்ற அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், மேலும் ஒருவர் தப்பியோடிய நிகழ்வு திருச்சி சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பிச் சென்ற நபரை பிடிக்க மாநகர காவல்துறை சார்பில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.