
திருச்சி மாவட்டம் முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆகியவற்றிலிருந்து கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே காவேரி கரையில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்பதற்காக சுவாமிகள் புறப்பாடு விழா நடைபெற்றது. வருடந்தோறும் கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் காவிரி ஆற்றின் அருகே நடக்கும் தைப்பூச திருவிழாவில் 8 ஊர்களிலிருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரங்களுடன் ஊர்வலமாக சென்று கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இவ்வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முசிறி சிவன் கோயிலில் இருந்து கற்பூரவள்ளி உடனுறை சந்திரமவுலீஸ்வரர், வெள்ளூர் கோயிலில் இருந்து சிவகாமசுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் சிறப்பு அலங்காரங்களுடன், மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள், பக்தர்கள் புடைசூழ முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, குளித்தலை கடம்பர் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தைப்பூச விழா பந்தலுக்கு சென்றது. முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.