ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு : எம்.எல்.ஏ.காடுவெட்டி தியாகராஜன் தகவல்
திருச்சி, செப்.15 தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு – மூன்று கட்ட திட்டங்கள் குறித்து திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தகவல்
திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின் பேரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில்சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பேசியதாவது.
ஜனவரி 1ம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் பண்பாடு பொருளாதார மற்றும் அரசியல் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கும் இயக்கமாக அது வலுப்பெற்றுள்ளது.
தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு, நீட் போன்ற நியாயமற்ற தீர்வுகள் கூட்டாட்சி தத்துவம் சிதைப்பு மற்றும் நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான தொகுதி மறு வரையறை, சாதி என தமிழ்நாட்டின் மண், மொழி மற்றும் மானத்தின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழ்நாடு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாட்களில் கழகத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 68,000 வாக்குச்சாவடிகளிலும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்று சந்தித்து உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை தாண்டி உள்ளது என்பதனை அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இணைக்கப்பட்ட குடும்பங்கள் தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க அணி திரண்டு உள்ள நிலையில் இப்போது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
ஓரணியில் தமிழ்நாடு குடும்பங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மற்றும் மாவட்ட அளவில் ஒன்று கூடி ஓரணியில் நின்று போராடி தமிழ்நாட்டை பாதுகாக்கும் தீர்மானங்களை முன்மொழிந்து ஏற்றுக்கொள்ள தயாராகி உள்ளது.செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழிவு கூட்டங்கள் நடைபெற உள்ளது.முதல் கட்டமாக நாளை செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68,000 வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாட்டை காக்கும் உறுதி மொழியை முன்மொழிய கூட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் லட்சக்கணக்கானோர் பங்குபெறும் முப்பெரும் விழாவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழக முதல்வரால் நிறைவேற்றப்படும்.
மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 20 அன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான கூட்டங்கள் நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாவட்ட கூட்டங்களில் கூடியிருக்கும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கை உயர்த்தி அல்லது ஒருமித்த குரலில் ஈர்க்கப்படும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களும் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என ஒரே குரலில் உலகிற்கு பிரகடனம் செய்யும் விதமாக இந்த கூட்டங்கள் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை நிலவுவதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் நடிகர் விஜய்யை காண வந்த அவரது கட்சித் தொண்டர்களுக்கு அவர்களால் குடிநீர் வழங்க முடியவில்லை ஒரு பாட்டில் குடிநீருக்கு அந்த மக்கள் பட்ட சிரமத்தை அவர் பார்க்கவில்லை போலிருக்கிறது என்று கூறினார்.