ரயில் தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரயில் மோதி உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லால்குடி அருகே வாளாடி புது ரோடு கீழத் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் 27 வயதான பார்த்திபன். இவர் நேற்று வாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விருதாச்சலம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.