காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது

0 518
Stalin trichy visit

காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அது சமயம் பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், ஆடி 18 அன்று நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கிருந்தவாறே காவிரி தாயருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக ரெங்க விலாஸ் மண்டபம் ஆடி 18-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு மாலை 4 மணியளவில் அலங்காரம், அமுது கண்டருளுவார்.
பின்னர் நம்பெருமாள் அங்கிருந்தபடியே மாலை 4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை 5.45 மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.