நல்லாசிரியர் விருதுக்கு வழங்கிய 10,000 பணத்தையும் முதியோர் இல்லத்திற்கு வழங்கி அவர்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்த ஆசிரியை – திருச்சி அருகே ஒரு நெகிழ்ச்சி!

0 538
Stalin trichy visit

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான். “ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி”. அவ்வளவு எளிதில் யாருக்கும் அப்பணிகள் கிடைத்துவிடுவதில்லை!

கவிதை வாசிப்பதில் கவிஞராக, நாடக வடிவில் என்றால் நாடக கலைஞராக, பாடத்தில் ஆடல் பாடல்கள் நிகழ்வுகள் என்றால் அதை அப்படியே ஒரு ஆசிரியர் செய்து மாணவர்களின் மனதில் இடம்பிடிக்கிறார் என்றால் அது மிகையாகாது. அதுபோலத்தான் திருச்சி அருகேயுள்ள ஆசிரியரின் செயல்பாடு கவனத்தை ஈர்த்துள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றாலும் தான் பெற்ற பத்தாயிரம் ரூபாயையும் அப்படியே முதியோர் இல்லத்தில் கொடுத்த அன்பு உள்ளம் இன்னும் மேலோங்கி சென்றுவிட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மு.மீனா ராமநாதன். அப்பகுதி மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராகவும், மாணவர்களின் ஃபேவரட் ஆசிரியராகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் நிலைமை சற்று மோசமாக தான் உள்ளது. அவர்களை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பலரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், தங்களால் இயன்ற உதவிகளையும் தொடர்ந்து செய்துகொண்டே வருகின்றனர்.

அந்த வகையில் ஆசிரியை மீனா பள்ளி குழந்தைகளுக்கு கிராமிய கலைகளை நடனமாடி கற்று கொடுத்ததோடு இந்த இக்கட்டான கால கட்டத்திலும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவர்களை சந்தித்து பாடங்களை நடத்தி வருகிறார்.


இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியை மீனாவை தொடர்பு கொண்டு பேசினோம்…. மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதோடு கடமை முடிவதில்லை. கல்வியைத் தவிர மாணவர்களின் தனித்திறமைகளை அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்‌. நான் என்னுடைய பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களின் தனித் திறமையை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறேன். எனக்கு சிறு வயது முதலே பாட்டு பாடுவது மற்றும் ஆடுவது ஆகியவற்றில் ஆர்வமாக இருப்பேன். கொரோனா ஆரம்பமாவதற்கு முன்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடனமாடி அதேபோல கல்வியை கற்றுக் கொடுத்தேன்.

அப்போது “சின்ன குயில்” என்னும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அக்குழுவில் மாணவர்கள் ஆரம்பத்தில் 3 பேரை இணைத்து செயல்பட்டது. கொரோனா ஆரம்பமான பிறகு சின்ன குயில் வாட்ஸப் குழுவின் மூலம் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் அவர்களின் அன்றாட பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதில் நடனமாடுவது பாட்டு பாடுவது கதை சொல்வது என அத்தனை விஷயங்களையும் செய்து வருகின்றனர். இதனை பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என பார்த்து மகிழ்கின்றனர். எங்கள் பள்ளியில் சுமார் 125 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
கிராமப்புறம் என்பதால் 40க்கும் மேற்பட்டோர் இக்குழுவில் உள்ளனர்.


தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை ஆரம்ப கல்வி என்பது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானது. நாம் என்ன ஒரு விஷயத்தை சொல்லித் தருகிறோமோ அவர்கள் அதை அப்படியே தங்களுடைய வாழ்வை நோக்கிய நகர்வுகளாக அது அமையும். நான் தினந்தோறும் என் பள்ளிக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு முகக் கவசங்கள் அணிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்டு பரிசுகளையும் வழங்கி வந்தேன். அந்த சமயத்தில்தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 6ம் தேதி நல்லாசிரியர் விருது கிடைத்தது.

என்னுடைய அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் வந்தது. நல்லாசிரியர் விருதுக்கு வாங்கிய அந்த பத்தாயிரம் அப்படியே சாமி புகைப்படத்திற்கு முன்னாடி வைத்திருந்தேன். நான் குடியிருக்கும் மணப்பாறை பகுதியில் உள்ள விடிவெள்ளி முதியோர் இல்லம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அறிந்தேன். உடனடியாக அங்கு சென்று என் அப்பாவின் நினைவு நாளில் அந்த பத்தாயிரம் ரூபாயை முதியோர் இல்லத்திற்கு கொடுத்தேன். அங்குள்ள அனைவரும் ஆடிப்பாடி, நடனமாடி மகிழ்ந்தனர். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது” என்றார்.

நல்லாசிரியர் விருது பெற்றும் அப்பாவின் நினைவாக முதியவர்களுடன் செலவழித்து மகிழ்வித்த ஆசிரியை மீனா உண்மையிலேயே கிரேட் தான்…..!

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.