திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எஸ்.என்.புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு பெட்ரோல் கேனுடன் ஒருபெண் நின்று, அந்த வீட்டில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார்
விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், கருத்து வேறு பாட்டின் காரணமாக விவாகரத்து கோரியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் குழந்தையுடன் தனது சொந்த ஊருக்கு
வந்துள்ளார். இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக, அந்த வாலிபர் வீட்டிற்கு அந்த பெண் பெட்ரோல் கேனுடன் வந்து மிரட்டியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அந்த பெண்ணிடம் அவரது குழந்தையை பார்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன்பேரில் அந்த பெண் அங்கிருந்து சென்றார்.