தேசத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவன், சீமான் : கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு
திருச்சி, மே 5 திருமாவளவன்,சீமான் உள்ளிட்டர் தேசத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் – திருச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி…
பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தானை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானை கண்டித்து,திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, நிர்வாகிகள் கவுதம் காலி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..
இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் இஸ்லாமியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். காஷ்மீரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா போன்ற பல இஸ்லாமிய தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டு குரல் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காஷ்மீர் மக்கள் மற்றும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் தேசத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டனர். உலக நாடுகள் முழுவதும் பாகிஸ்தான் தூண்டுதலில் நடைபெற்ற இந்த காஷ்மீர் தாக்குதலை கண்டிதுள்ளன. இந்தியாவிற்கு ஆதரவாக எதையும் செய்வதற்கு உலக நாடுகள் தயாராக உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது வேதனையாக உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது அவர் தேச துரோகி என்று எண்ண தோன்றுகின்றது.
திருமாவளவன், சீமான் போன்றவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூடாது என்று கூறுகின்றனர். பாகிஸ்தானியர்களை வெளியேற்றக் கூடாது என்று கூறுகின்றனர். இதெல்லாம் இந்த தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறினார்.