விவசாயிகளுக்கு வேளாண் வணிகம் தொடர்பாக பயிற்சி
திருச்சி மாவட்டம், லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையத்தின் மூலமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு வேளாண் வணிகம் தொடர்பாக இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை திருச்சி துணை இயக்குநர் (வேளாண் வணிகம் ) சரவணன் தொடங்கி வைத்து, உழவர்சந்தை, குளிர்பதன கிடங்குகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான அரசின் ஆதரவு திட்டங்கள், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டம், வேளாண் ஏற்றுமதி, அக்மார்க், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி குறித்த தகவல்களை விளக்கி பேசினார்.
லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சிவசக்தி, ‘‘நெல், எள் சாகுபடியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகள் குறித்தும் மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்தும் திருச்சி விற்பனைக்குழு கண்காணிப்பாளர் யாஸ்மின் விளக்கிக் கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்சிமலைக்கோட்டை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஸ்வரன், வல்லுனர் திருமலைராஜன, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய வேளாண்மை உதவி இயக்குநர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.