திருச்சி காவிரி பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, மார்ச் 4. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி பாலத்தின் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றதையொட்டி, பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக காவிரி பாலத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திருச்சி மாநகரின் மய்யப்பகுதியில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வண்ணம் அமைந்துள்ள காவிரி பாலம் கடந்த 1976-ல் கட்டப்பட்டது. இப்பாலத்தின் மொத்த நீளம் 0.6 கீ.மீ. இப்பாலம் 15 கண்கள்(Spans) உடையது. இப்பாலத்தின் மொத்த அகலம் 19.20 மீட்டர் பாலத்தின் 32 தட்டுகளின் இணைப்பு பகுதி(Strip Seal Expansion Joint) மற்றும் இப்பாலம் கட்டப்படும்போது வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளின்(Bearings) ஆயுட் காலம் முடிந்து விட்டதாலும், பாலத்தின் ஓடுதளத்தில் செல்லும் கனரக வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும், அதன் விரியும் தன்மை குறைந்தும், அதிர்வு தாங்கும் சக்தி குறைந்தும் உள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாகவும் ஓடுதளம் பெயர்ந்து (Concrete Surface) கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் பள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் வாகனம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய புணரமைப்பு பணிகள் ரூ.6,84 இலட்சம் மதிப்பிற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் மேற்கொள்வதற்காக திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்தினை நிறுத்தி, மாற்று பாதையில் செல்லும் வகையில் 10.09.2022 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தொடர்மழை பெய்ததால் பாலத்தின் புணரமைப்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. எனினும், பாலம் புணரமைப்பு பணி 11.09.2022 முதல் பாலத்தின் மேற்பரப்பில் இணைப்பு பகுதியில் புதியதாக (Strip Seal) Expansion Joint பொருத்தும் பணிகள் மற்றும் இதர முக்கிய பணிகள் போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட்டன. பாலத்தின் மேல் ஓடுதளத்தில் தார்தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்று இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி பாலத்தின் மேல்புறம் புதிதாக ஒரு உயர்மட்ட பாலம் கட்டுதல் தொடர்பாக அரசிற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, ரூ.120.00 கோடி மதிப்பில் அரசின் ஒப்புதல் பெரும் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் க.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், காவல் துணை ஆணையர் வி.அன்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் இராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கேசவன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் திரு.கண்ணன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.