திருச்சி சிறுமியை கடத்தி திருமணம்; போக்சோவில் இளைஞர் கைது!

0 374
Stalin trichy visit

சிறுமியை கடத்தி திருமணம்; போக்சோவில் இளைஞர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் இதுகுறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், மரவனூரை சேர்ந்த பிரசன்னா(19) என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு திருச்சி காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி சுப்பிரமணியபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் கண்ணன்(56). இவர் திருச்சி ரயில்வேயில் முதன்மை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வரும் தனது மகளை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்று உள்ளார். பின்னர் மகளை அழைத்துக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் அருகிலுள்ள கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

சிறுமி கடத்தலா? போலீசார் விசாரணை

திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அமிர்தா (16). இவர் பொன்மலை பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதால் வீட்டிலிருந்தே படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி கழிப்பிடம் சென்று வருவதாக கூறி வெளியே சென்ற சிறுமி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தா கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தகராறில் 3 மகள்களுக்கு விஷம் கொடுத்த தாய்

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த சின்னக்கோன்குளத்துப்பட்டி அருகே உள்ள மூடகொரை பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சத்தியபிரியா (24). இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று முன்தினம் இரவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த சத்தியபிரியா கரையான் மருந்தை தன்னுடைய 3 மகள்களுக்கும் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த குடும்பத்தினர் 4 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.