திருச்சி சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி பாலக்கரை இருதயபுரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் அம்மாசி( 38). இவருடைய மகள் ஜனனி (15). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அரசு காலனியை சேர்ந்தவர் மலையாண்டி (73). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் நண்பரை பார்ப்பதற்காக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றுள்ளார். பால்பண்ணை மேம்பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்திலிருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதியதில் கால் நசுங்கியது. இதையடுத்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால் தீக்குளித்த கணவர்
திருச்சி வரகனேரி பெரியபாளையத்தை சேர்ந்தவர் பாசித்ராஜ் (27). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மனஉளைச்சலில் கடந்த 14-ந் தேதி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு
திருவானைக்காவல் மேலகொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (20). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தர். ஒய்ரோடு அருகே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.