திருச்சி சிவா எம்.பி. உடல் உறுப்புகளை தானமாக வழங்க பதிவு
திருச்சி, ஜன.27 மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பதிவு செய்தார்.
திருச்சி தந்தை பெரியார் அரசினர் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் இணைந்து உடல் உறுப்பு தானம், குருதி கொடை வழங்கும்
விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இவ்விழாவில் தலைமையேற்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் தனது உடல் உறுப்பை தானமாக வழங்குவதாக முடிவு எடுத்து அறிவித்தார். அதன் பிறகு உடல் உறுப்பு மற்றும் குருதி தானம் செய்வதன் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்னாள்,இன்னாள் மாணவர்கள் பதிவு செய்தனர்.
திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் படித்து முடித்த பழைய மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தந்தை பெரியார் கல்லூரியில் படித்த படிக்கின்ற மாணவ மாணவியர்கள் நாட்டின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு குருதி மற்றும் உடல் உறுப்புகள் கிடைக்காமல் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக முதற்கட்டமாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை குருதி தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முதற்கட்டமாக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு குருதி தானம் வழங்கினார்கள்.இதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அரசு மருத்துவமனையில் பதிவு செய்தனர். முதற்கட்டமாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக மற்ற மாணவர்களும் பதிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்கள். இன்று நான் உடலுறுப்பு தானம் செய்வதாக பதிவு செய்துள்ளேன். அதனை அடுத்து மாணவர்களும் ஏராளமான பதிவு செய்து வருகின்றனர். இங்கு குருதி கொடை வழங்குவதால் அரசு மருத்துவமனையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அவசர சிகிச்சைக்கு உயிர்காக்க உதவும். அதேபோல உடல் உறுப்பு தானங்களை ஏராளமானோர் செய்வதால் தமிழ்நாடு முதல்வரும் மகிழ்ச்சி அடைவார். இன்று நானும் உடலுறுப்பை தானமாக வழங்க அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டார்.