கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!

0 350
Stalin trichy visit

திருச்சி லால்குடி பெருவளப்பூர் பகுதியில் அமைந்துள்ளது நெய்க்குளம் கிராமம். இங்குள்ள 3 ஹெக்டேர் அரசு புறம்போக்கு இடத்தில் வெங்கடேசன் என்பவர் கல்குவாரி குத்தகைக்கு எடுத்து கல்குவாரியில் பணிகளை தொடங்கி உள்ளார். கிராமத்தை சுற்றி ஏரி, குளம் உள்ள நிலையில் கல் குவாரி ஏலம் தொடர்பாக கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் குத்தகைக்கு விடப்பட்டதாகவும், கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நெய்க்குளம் கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர்.

கல்குவாரியில் பணிகள் நடைபெற்ற பொழுது, தங்கள் பகுதியில் கல்குவாரி செயல்படக் கூடாது என கல்குவாரி பணிகள் நடைபெறாமல் மக்கள் தடுத்த நிலையில் கிராம மக்கள் மீது சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.