வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருச்சி, பிப். 18 மணப்பாறை அருகே வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.