காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தண்ணீரை முறைப்படி திறந்து விட்டனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும் கர்நாடக அணைகள் நிரம்பியதாலும் மேட்டூர் அணை 118 அடியை எட்டியதாலும் தமிழக அரசு கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதாக அறிவித்ததோடு அல்லாமல் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
அதன் அடிப்படையில் கல்லணைக்கு காவிரி ஆற்றில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வைத்தார். திருச்சி கலெக்டர் சிவராசு, மயிலாடுதுறை லலிதா, தஞ்சாவூர் எம்பி பழனிமாணிக்கம், தஞ்சை மேயர் சன்ராமநாதன், திருச்சி மேயர் அன்பழகன், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லணை காவிரி ஆற்றிலிருந்து முறைப்படி 5.10 மணியளவில் காவிரி ஆற்றிலும்வெண்ணாற்றில் 5 .17க்கும்
கல்லணை கால்வாயை 5.22க்கும் 5.30க்கு கொள்ளிட ஆற்றிலும் தண்ணீரை திறந்து விட்டனர்
இதில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் வினாடிக்கு 500 கனஅடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் தஞ்சாவூரில் 1,11, 150 ஏக்கர், திருவாரூர், 93860 ஏக்கர், நாகை 19,760, மயிலாடுதுறை 86,450, கடலூர் 24,700, அரியலூர் 2470ஏக்கர் என மொத்தம் 3,38,390ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றி உள்ள ஆறுகள், கால்வாய்கள் வடிகால்களை ரூ. 4540.04லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3753.08கிலோ மீட்டர் தூரத்தில் சிறப்பு திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு நீர் வரத்து, பருவமழை, மேலும் கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டியது நீரின் அளவு ஆகியவற்றை பொருத்து காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் ஏற்படுத்தப்படும் எனவும் பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.
வேளாண் மற்றும் வருவாய் துறையினரின் கருத்துக்களை கேட்டு நீர் பங்கீடு மேற்கொள்வதற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாக தேவைக்கேற்பவும் பயன்படுத்தி பயன்பெறுமாறு விவசாயிகளை வேளாண் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன்,செயற்பொறியாளர் சொன்ன குமார் உதவி செயற்பொறியாளர் சிவகுமார்,உதவி பொறியாளர்கள் திருமாறன், ஐயம்பெருமாள், சேகர்உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.