பெரும் தொற்றின் காரணமாக கடந்த 600 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஏனைய வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சியிலும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று வீட்டிலிருந்தே பாடம் படித்து வந்தார்கள்.

இந்நிலையில் பெரும் தொற்று குறைந்து இருக்கின்ற காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நவம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளி திறக்க தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் முயற்சி எடுத்து வந்தன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகள் ஆன ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் மனநலத்தைக் காக்கும் பொருட்டும் அவர்கள் மன மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரவும் அரசு பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது.

அதன்படி ஆங்காங்கு உள்ள பள்ளிகளுக்கு அருகில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், கவுன்சிலர்கள் என பல முக்கிய பிரமுகர்களும், தாங்களாகவே முதன்முதலில் பள்ளிக்கு வருகின்ற சிறு குழந்தைகளை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு பூக்கொத்து, இனிப்பு ஆகியவற்றை வழங்கி அவர்களது மன நலனுக்கு வித்திட ஆணையிட்டது.
இதன்படி ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சற்குணன் சார்பில் அவரது தலைமையில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியப் பெரு மக்களும் மாணவ, மாணவிகளும், ஊனையூர் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் சென்று வரவேற்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மேளதாளத்தோடு அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வந்தனர்.
ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று மகிழ்ந்தனர். ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மன மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் சென்றனர். ஆரம்பப் பள்ளி மாணவர்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மேளதாளத்தோடு அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த இந்நிகழ்ச்சியை பெற்றோர்களும் பொதுமக்களும் மனம் திறந்து பாராட்டினார்.