உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

0 9
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின்  உத்தரவின் பேரில் உய்யக்கொண்டான் பாசன வாய்க்கால் பகுதியில் செல்லும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் உத்தரவின் பேரில் இன்று (28.08.2026)  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஆழ்வார் தோப்பு முதல் ஆலத்தூர் வரை உய்யக்கொண்டான் பாசன வாய்க்காலில் சுமார் 20கி.மீ நீளத்திற்கு அதிக அளவு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதை தொடர்ந்து நீர்வளத் துறையின் மூலம் வரகனேரி பகுதியில் செல்லும் உய்யக்கொண்டான் பாசன வாய்க்காலில் எல்லைக்குட்பட்ட 32.50கி.மீ முதல் 34.90கி.மீ. வரை 2.40கி.மீ. நீளத்திற்கு 9.75 இலட்சம் மதிப்பீட்டில் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது.

வாய்க்காலில் தடையின்றி நீரோட்டத்தை ஏற்படுத்தவும், விவசாயத்திற்கு தேவையான நீர் செல்வதை மேம்படுத்துவதும் ஆகும். உய்யகொண்டான் வாய்க்கால் சாதாரண நீர் வழியல்ல. இது மிகவும் பழைமையான சோழர் காலத்து முக்கிய பாசன கட்டமைப்பு ஆகும். உய்யகொண்டான் வாய்க்கால் காவிரியிலிருந்து பிரிக்கப்பட்டு திருச்சி சுற்றுப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.

இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நீர்ப்பாசனத்திற்கு ஒரு பகுதியாக உள்ளது. உய்யகொண்டான் வாய்க்கால் காவிரியாற்றிலிருந்து பெட்டவாய்த்தலை அருகே பிரிந்து, திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளை கடந்து வாழவந்தான்கோட்டை பகுதியை நோக்கி சென்றடைகிறது. அதன் நீளம் சுமார் 70 கி.மீ. ஆகும். சுமார் 36 நீர் நிலைகளுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் கிடைக்கும் நீர் பல ஏரிகள், குளங்கள் மற்றும் கிளை வாய்க்கால்களாக பிரிந்து சுமார் 32742 ஏக்கரில் 30528 ஏக்கர் திருச்சி மாவட்டத்திலும், 2214 ஏக்கர் தஞ்சாவூர் மாவட்டத்திலும் பாசனத்திற்காக பயன்படுகிறது. இதன் மூலம் நெல், வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை போன்ற பயிர்களுக்கு பாசனத்திற்கு நீர் ஆதாரமாக பயன்படுகிறது.

வாய்க்காலில் அதிகமாக வளரும் ஆகாயத்தாமரையால் நீரின் மேற்பரப்பு மூடி விடுகிறது. நீரின் ஓட்டம் குறைவதால் கிளைவாய்க்கால்களுக்கு நீர் செல்வது தடைபடுவதால் பாசன பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. ஆகாயத்தாமரை வளர்ச்சி அதிகளவில் வளர்வதால் நீர் நிலையின் இயற்கையான நிலை பாதிப்பதோடு கழிவுகள் தேங்குவதற்கும் இது வழிவகுக்கிறது. ஆகவே இதனை உடனடியாக அகற்றி மேட்டூர் அணை திறப்பதற்கு முன் வாய்க்கால்களை தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின்  நீர்வளத்துறை அலுவலர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.