மணப்பாறை அருகே மின் கம்பிகளை திருட முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்
திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாடு முதல் பாலக்குறிச்சி வரை புதிய உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான மின் கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் இணைப்பு ராடுகள் உள்ளிட்ட உபகரணங்களை ராஜாபட்டியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டின் பின்புறம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரு மர்ம நபர்கள் சுமார் ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள 7500 மீட்டர் கொண்ட மின்கம்பி உருளையை உருட்டிக் சென்று சுமார் 50 மீட்டர் தொலைவில் வைத்து அதன் கம்பிகளை துண்டு துண்டாக நறுக்கி திருட முயன்றபோது அவ்வழியே சென்ற இளைஞர்கள் மர்ம நபர்களை துரத்திய போது அதில் ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில் மற்றொருவர் தப்பினார்.
பின்னர் மர்ம நபரை வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருச்சி, தாராநல்லூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்த போலீசார் தப்பியோடிய செல்வமணி என்பவரை தேடி வருகின்றனர்.