மணப்பாறை அருகே நள்ளிரவில் துணிக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் காவல்காரன்பட்டியில் மணப்பாறை – புத்தாநத்தம் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருக்க மற்றொருவர் இரும்பு கம்பியை பயன்படுத்தி கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தபோது சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சந்தேகமடைந்து சத்தம் போடவே கொள்ளையர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சிட்டாக பறந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரில் புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்ற நிலையில், தற்போது மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.