திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், ஓமன், அபுதாபி, இலங்கை, துபாய், சவுதி உள்ள நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு வியாபார பயணமாக செல்லும் பலர்
அங்கிருந்து திரும்பும்போது தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமானங்கள் திருச்சி வந்தது. இதேபோன்று சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் இந்த 3 விமானங்களிலும் பயணம் செய்த 26 பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.