திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மேலகொண்டையம்பேட்டையை அடுத்து ஒய் ரோடு ஜங்ஷனில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவ்வழியே வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்தகாரின் உள்ளே 15 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து
காருடன் ரேஷன் அரிசி மூட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்ஐ அலாவுதீன் நடத்திய விசாரணையில் சிக்கியது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த லோகநாதன் மகன் கவின்குமார்(வயது 22)
என்பதும், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை வாங்கி மண்ணச்சநல்லூரில் உள்ள அரவை மில்லில் விற்று வருவது தெரியவந்தது. தொடர்ந்து 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கைதான கவின்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.