குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது : மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை
வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது – திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா எச்சரிக்கை.
கடந்த 21.03.23-ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தங்கேஸ்வரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மதுபாட்டில்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி பறித்ததாகவும் பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரவுடி சோனி (எ) பரத்குமார் த.பெ.பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் ரவுடி சோனி (எ) பரத்குமார் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே சோனி (எ) பரத்குமார் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எனவும், கஞ்சா விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்ததால் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த காவல் ஆணையர் சத்திய பிரியா குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
மேலும் கடந்த 30.01.23-ந்தேதி தில்லைநகர், சாஸ்திரிரோட்டில் இரவு நேரத்தில் பூட்டியிருந்த ஸ்டேஷ்னரி கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ.90000/- பணம் மற்றும் 16 கிராம் தங்க காசுகளை திருடு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் திருச்சி பீமாநகரை சேர்ந்த கிறிஸ்டோன் (எ) மூனு த.பெ.பெனடிக் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் கிறிஸ்டோன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே எதிரி கிறிஸ்டோன் (எ) மூனு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதும், இரவு நேரங்களில் வீடு மற்றும் கடைகளில் பூட்டை உடைத்து திருடும், எண்ணம் கொண்டவர் என விசாரணையில் தெரிய வந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த காவல் ஆணையர் சத்திய பிரியா, மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.