மருந்து விற்பனை உரிமம் வழங்க லஞ்சம் பெற்றவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி, ஜூலை 6 திருச்சி, உறையூர், நவாப்தோட்டத்தை சேர்ந்த அன்பரசு என்பவரிடம் மருந்து மொத்த வியாபாரம் நடத்த பரிந்துரை செய்து உரிமம் வழங்குவதற்கு திருச்சி மருந்து கட்டுப்பாடுகள், உதவி இயக்குநர் பார்த்திபன், மற்றும் முதுநிலை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சிவபுண்ணியம் ஆகியோர் தலா ரூ.5,000/- மற்றும் ரூ.2,000/- கையூட்டாக கேட்டாதால், அன்பரசு கொடுத்த புகார்மனுவின் அடிப்படையில் பார்த்திபன் மற்றும் சிவபுண்ணியம் ஆகியோர் மீது திருச்சி ஊ.த.க பிரிவு கு.எண்.12/2008, சட்டப்பிரிவு 7 ஊழல் தடுப்புச்சட்டம்-1988ன்படி கடந்த 19.05.2008ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 19.05.2008ந்தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் அன்பரசு என்பவரிடம் பார்த்திபன் மற்றும் சிவபுண்ணியம் ஆகியோர் மீண்டும் கையூட்டாக மொத்தம் ரூ.7,000/-ஐ கேட்டு, அதை தனிநபரான சேகர் என்பவரிடம் கொடுக்க சொன்னதின்பேரின், புகார்தாரர் அன்பரசிடம் சேகர் என்பவர் கையூட்டுப் பணத்தை பெற்ற போது எதிரிகள் பார்த்திபன், உதவி இயக்குநர், மருந்து கட்டுப்பாடுகள், திருச்சி மற்றும் சிவபுண்ணியம், த/பெ.முதுநிலை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் சேகர், த/பெ. ரத்தினம் (தனி நபர்) ஆகியோர்கள், அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் அம்பிகாபதி அவர்களால் கைது செய்தார்.
மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 06.07.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், திருச்சி மருந்து கட்டுப்பாடுகள், உதவி இயக்குநர், பார்த்திபன், மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சிவபுண்ணியம் ஆகியோர் லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் எதிரி பார்த்திபனுக்கு ரூ.10,000/-மும், எதிரி திரு.சிவபுண்ணியத்திற்கு ரூ.10,000/- அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் எதிரி சேகர், த/பெ.ரத்தினம் (தனி நபர்) என்பவர் கையூட்டு பணம் என்று தெரிந்தே பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும் எதிரிகள் பார்த்திபன் மற்றும் சிவபுண்ணியம் ஆகியோர்கள் மீது கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வழக்கினை கோ.மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தது மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.