திருச்சியை தலைமையிடமாக கொண்டு திருச்சி கல்லுக்குழியில் “எல்பின்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் திருப்பி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, அதற்கான ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை பெற்றனர்.
ஆதார் கார்டை பெற்றதை அடுத்து, அதனை நம்பிய பொது மக்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு அவர்கள் கூறியபடி முதல் தவணை தொகையை மட்டும் வழங்கி விட்டு, எஞ்சிய மாதங்களுக்கான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்.
எல்பின் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த, திருச்சி பிராட்டியூர் ஈடன்கார்டன் எம்.ஜி.ரோட்டை சேர்ந்த மிதுன் சமேஷ்(28) என்பவர், மாநகர கமிஷனர் அருணை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி கல்லுக்குழியில் இயங்கி வரும் எல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 மடங்கு லாபம் தருவதாக ஏஜெண்டுகள் (கேன்வாசர்கள்) கூறியதையடுத்து, அந்நிறுவனத்தில் ரூ.72,82,500 ரொக்கம், வங்கி மூலம் நெப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். மூலம் முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த பணத்தை 10 மாதம் கழித்து 3 மடங்கு தருவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கூறினர். அவர்கள் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நானும், எனது உறவினர்கள் 10 பேரிடம் இருந்து 43,28,400-ஐ பெற்று கொடுத்தேன்.
எல்பின் நிதிநிறுவனம் சொன்னபடி, 2, 3 மடங்கு பணம் உரிய காலத்தில் கொடுப்பதாக கூறியதை கொடுக்காமல் ஒரு சிறு தொகை மட்டும் கொடுத்தது. நாங்கள் செலுத்திய பணத்திற்கான காலகெடு முடிவடைந்த நிலையில், ரூ.4 கோடியே 68 லட்சத்து 35 ஆயிரத்து 500 பணத்தை நானும் எனது உறவினர்களும் நிறுவன அலுவலகம் சென்று கேட்டோம்.
அப்போது அலுவலகத்தில் இருந்த உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ் மற்றும் ஏஜெண்டுகள் பால்ராஜ், சாகுல் ஹமீது, அறிவுமணி, பாபு , இளங்கோவன் மற்றும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத சிலரும் பணத்தை கொடுக்க மறுத்து அவதூறான வார்த்தை சொல்லி திட்டி தங்களிடம் இருந்த காசோலைகளையும் பறித்துக்கொண்டனர்.
மேலும் பணம் வரும் போது தருவோம். தற்போது இல்லை என்று மிரட்டி, எனது பணமும் எனது உறவினர்கள் பணமும் ரூ.4 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 500ஐ பெற்றுதர வேண்டும். மேலும் பணம் கேட்க சென்ற போது அந்நிறுவனத்தில் இருந்த 10க்கு மேற்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், எல்பின் நிதி நிறுவன உரிமையாளர்களான ராஜா, ரமேஷ்குமார் மற்றும் ஏஜெண்டுகள் பால்ராஜ், சாகுல்ஹமீது, அறிவுமணி, பாபு, இளங்கோவன், மதிவாணன், ராஜப்பா , பாதுஷா மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத சிலர் மீது இ.பி.கோ. 417, 420, 294(பி), 506(1) மற்றும் 120 (பி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 500 மோசடி வழக்கில் எல்பின் நிறுவன ஏஜெண்டுகளான திருச்சி வயலூர் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த பால்ராஜ் (58), திருவானக்காவலை சேர்ந்த அறிவுமணி(45) கண்டோன்மெண்ட் ராஜாகாலனியை சேர்ந்த பாபு(50) மற்றும் பிச்சாண்டார்கோவிலை சேர்ந்த இளங்கோவன்(50) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் 4 பேரும் திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய எல்பின் நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னையில் பதுங்கி இருக்கும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.