9 மாவட்ட எஸ்.பி. அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மத்திய மண்டல ஐ.ஜி.தகவல்
மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் மத்திய மண்டலத் தலைவர் உத்தரவின் பேரில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட காவல் அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கடந்த இரு மாதங்களாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட காவல் அலுவலகத்தின் தரைத் தளத்தில் வைத்தே அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர்கள் புகார் மனுக்களை நேரில் பெற்று அதன் மேல் உரிய மேல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகளை கனிவுடன் அணுகவும், அவர்களை முறையாக கையாள்வதற்கான பயிற்சி மாவட்ட அளவில் காவல் ஆளினர்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பயிற்சி பெற்ற இரண்டு காவலர்கள் ஒவ்வொரு மாவட்ட காவல் அலுவலகத்திலும் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் புகார் மனுவை அளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தொடர்பு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுத் திறனாளிகள் தாங்கள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதும் பட்சத்தில் அவர்கள் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகங்கள் திருச்சி (0431-2333909) மற்றும் தஞ்சாவூர் (04362-277577) ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் கருதும் பட்சத்தில் அவர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலக தொலைபேசி எண் 0431-2333866 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.