திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீள நல்ல பாம்பு – தீயணைப்பு வீரர்கள் மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நத்தம் கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளமுள்ள நல்லபாம்பு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் இவர் வீட்டில் இன்று 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. பாம்பைக் கண்டதும் வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியே ஓடிவந்தனர். பாம்பை விரட்ட முயற்சி செய்தபோது பாம்பு பொந்துக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபண்ணா தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார், ஓட்டுனர் திராவிடன்,வீரர்கள் மணிகண்டன், ரமேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை விடுவித்தனர்.