காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் என்ற சுஜா (வயது 21) மெக்கானிக் வேலை செய்து வருகிறார். சுதர்சனின் உறவினர்கள் ஈரோட்டில் உள்ளனர். இதனால், அடிக்கடி சுதர்சன் ஈரோட்டுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஈரோட்டில் கல்லூரி ஒன்றில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் திவ்யா (வயது20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதல் விஷயம், திவ்யாவின் வீட்டிற்கு தெரிந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி வயலூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என திருச்சிஉறையூர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே சினிமாவிற்கு செல்வதாக கூறி சென்ற மகன் சுதர்சனை காணவில்லை என்றும் அவரின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் செய்திருப்பது தெரிய வந்தது. அதுபோல ஈரோட்டை சேர்ந்த திவ்யா, கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் ஈரோடு போலீசில் புகார் செய்திருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.