சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்!
திருச்சி மாவட்ட மைய முதல்நிலை நூலகர் தனலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வருகிற 8ம் தேதி நூலக வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8ம் தேதி நூலகத்திற்கு வரும் அனைத்து மகளிரும் கட்டணமின்றி உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். உறுப்பினராவதற்கு செலுத்தவேண்டிய காப்புத் தொகையை வாசகர் வட்டம் ஏற்றுக்கொள்ளும். அன்றைய தினம் மகளிர்கான கட்டுரைப்போட்டி 10:30 மணி முதல் 11.30 மணி வரை
நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் நேரில் வந்து என் வாழ்வில் நூலகம் என்ற தலைப்பில் அவர்களது வாழ்வில் நூலகங்கள் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது என்று தங்களது சொந்த அனுபவங்களை கட்டுரையாக எழுத வேண்டும். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெறும் சிறந்த கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2வது பரிசாக ரூ.3 ஆயிரமும்,
3வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 7ம் தேதிக்குள் தங்களது பெயரை நேரிலோ அல்லது மைய நூலக தொலைபேசி 0431-2702242 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். கட்டுரை போட்டியை தொடர்ந்து மகளிர்களுக்கு இடையே நூலகமும் மகளிரும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான நூல்கள் சிறப்பு கண்காட்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.