வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவாலயத்தின் திருவிழாவைமுன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவாலயத்தின் திருவிழாவைமுன்னிட்டு 16ம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. இவ்விழாவில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், அதன்பின் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆழியில் விறகுகள் அடுக்கப்பட்டு தீ பற்றவைக்கப்பட்டது. பின்னர் 1008 சரண கோஷங்கள் முழங்க தயாராக இருந்த குண்டத்தை சுற்றிவந்த பக்தர்கள் குண்டத்தில் பூக்களை தூவி வழிபாடு செய்தனர். தொடர்ந்து குண்டத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து பக்தர்கள் ஒருவர் பின்

ஒருவராக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சிறு குழந்தைகள் முதல் அதிக அளவிலான பெண்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழியில் இருந்த சாம்பலை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.