அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு இதான் வழி!
திருச்சி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் வே.அறிவழகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயம் லாபகரமாக இருக்க வேண்டுமானால் இடுபொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். இடுபொருட்களில் முதன்மையானது விதை ஆகும். தரமான விதை என்பது அதிகப்படியான முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம், பிற ரக கலப்பு இல்லாமை, புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை உடையது. விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை பயன்படுத்தும்போது, நல்ல முளைப்பு திறனுடன்
பயிர் வளர்ச்சி சீராக இருக்கும். சான்று பெற்ற விதைகளில் ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற சான்றட்டையும், சான்று நிலை விதைகளுக்கு நீலநிற சான்றட்டையும் பொருத்தப்பட்டு இருக்கும். சான்று பெற்ற விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். திருச்சி மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் சம்பா நெல்
விதை ரகங்களான CO(R)50, TKM 13 மற்றும் TRY-3 வேளாண்துறை மூலம் புதூர்பாளையம், நெய்குப்பைபுதூர், மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் மணப்பாறையில் இயங்கி வரும் விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை பயன்படுத்தி அதிகமகசூல் எடுத்து அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.