தமிழ் அர்ச்சகர்கள் நியமனம் எதிரொலியாக கோவில்களில் இருந்து பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவதால் அவர்கள் அழுது புலம்பும் ஆடியோ வைரலாகிறது

0 532
Stalin trichy visit

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்ய அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அதன்படி, திருச்சி, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், புதிதாக அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை வாத்தியக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பெரும்பாலானவர்கள் நேற்று முன்தினம் காலையில் கோவில்களுக்கு சென்று, நித்திய பூஜை மற்றும் வழிபாட்டு பணிகளை தொடங்கினர். இதில் திருச்சி மாவட்டத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவர் ஓதுவாராகவும், பெரம்பலூரை சேர்ந்த சதீஷ்குமார் தவில் வாசிப்பவராகவும், அருண்குமார் நட்டுவங்கம் இசைப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் உப கோவிலான மாகாளிக்குடி முக்தீஸ்வரர் கோவிலில், திருப்பூரை சேர்ந்த மகேஷ்குமார், உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவிலில் கோபிநாத், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் மண்ணச்சநல்லூரை சேர்ந்த சஞ்சீவி, திருப்பதி ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை– முல்லை வனநாதர் கோவிலுக்கு உட்பட்ட வரதராஜப் பெருமாள் கோவிலில் பட்டாச்சாரியராக நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் சிவன் கோவிலில், தமிழ் முறை அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மெய்க்காவலர் இருவர், இரவுக்காவலர், அக்வைதர், திருவடி சேவைக்கு என தலா ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில், ஏற்கனவே பணி புரிந்த அர்ச்சகர்களிடம் இருந்து, சாவி உள்ளிட்ட பொறுப்புகள் பெறப்பட்டு, புதிய அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில், வயலூர் முருகன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டது ஆதங்கத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி செல்போன் பேச்சுக்கள், அழுது புலம்பும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் என்பவர் கணேஷ்குமார் என்பவருடன் போனில் அழுவதுபோல பேசும் போன்ற ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடியோ பேச்சில், ‘மலைக்கோட்டை கோவில், நாகநாதர் கோவில்களில், நேற்று காலையே புதிய பணியாளர்கள் வந்து பணியில் சேர்ந்து விட்டனர். நாகநாதர் கோவிலில் காலை சந்தி முடிந்தவுடன், சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு, புதியவருக்கு பணி போட்டு விட்டனர். வயலூர் குமாரசுப்பிரமணியர் (முருகன் கோவில்) கோவிலிலும், 5 குருக்களை வெளியே அனுப்பி விட்டு பிராமணர் அல்லாதவரை பணியமர்த்தி விட்டனர்.

சமயபுரத்திலும் மூலவர், ஆதிமாரியம்மன், பரிவார மூர்த்தி சன்னதிகளிலும், குருக்கள்களை வெளியேற்றி விட்டு, ஜே.சி., வந்து, புதியவரை பணியமர்த்தி விட்டார். வயலூரில், காலையில், இ.ஓ.,வே வந்து, சிதம்பரம், கார்த்தி போன்றவர்களை உள்ளே வரக் கூடாது, என்று கூறி வெளியே அனுப்பியிருக்கின்றனர். என்று முடியும் அந்த ஆடியோவில், இறுதியில் போன் செய்தவர், கதறி அழும் குரலும் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,” புதிய அரசர்கள் நியமனத்தால் ஏற்கனவே கோவிலில் பணியாற்றிய வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்து அறநிலை துறையில் புதிய பணி நியமனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போலி கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வில்லை. நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. சீரழிந்துபோன இந்து அறநிலையத்துறையை சீர் படுத்தும் பணியை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.