திருச்சியில் பூட்டி இருந்த வீட்டில் 100 பவுன் தங்க நகை திருட்டு – உறையூர் போலீசார் விசாரணை
செந்தில்நாதன் என்பவருடைய வீடு திருச்சி மாநகரம் உறையூர் ராமலிங்க நகர் முதலாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. செந்தில்நாதன் அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மனைவி கனிமொழி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் ராமலிங்க நகர் வீட்டில் வசித்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த 1 ஆம் தேதி கனிமொழி தன்னுடைய குழந்தைகளுடன் சீர்காழியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த அலமாறியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100பவுன் நகை மற்றும் ரூ.70,000 பணம் திருடு போய் இருந்துள்ளது. இது குறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் உடனடியாக அவர் வீட்டிற்கு சென்ற உறையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் பொன்னி உதவியிடன் அங்கு சோதனை செய்யப்பட்டது.
கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
அவர்கள் வீட்டில் சி.சி.டி.விகள் வைக்கப்பட்டிருந்த போதும் அதன் ஹார்டு டிஸ்குகளை திருடர்கள் எடுத்து சென்று விட்டனர். அதனால் அருகில் வேறு எங்காவது சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளதா எனவும் அதில் திருடர்கள் காட்சி பதிவாகி உள்ளதா என்பது குறித்து காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர்.
அதிக குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.