பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் துரை இவரது மகள் தமிழரசி (27). இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. பாலமுருகன் பணியின் நிமித்தம் கூலி வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஜீலை மாதம் தமிழரசி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் ஆகாஷ் விக்னேஷ் மணிகண்டன் என்ற மூன்று வாலிபர்கள் என்றும், தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை காவல்துறையினர் உரிய வழக்கு பதிவு செய்யாமல் ஒரு வருட காலமாக தங்களை தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.