ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா தொடக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவின் முதல் நாள் உற்சவம் கோலாகலமாக துவங்கியது – ரத்தின நீள் முடி கிரீடத்துடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் காட்சி.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா –
நேற்று மாலை
திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.
பகல் பத்து முதல் நாள் திருவிழாவான இன்று விருச்சக லக்னத்தில் நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம்,கபாய் சட்டை,ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை உள்ளிட்ட, அடுக்கு பதக்கங்களை சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
கோவிந்தா கோபாலா மந்திரம் முழங்க மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறுகிறது.
இன்று 7.15 முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யவும் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதலாம் திருநாள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகுந்த ஏகாதேசி பெருந்திரு விழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருகிறார் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இத்திருவிழாவை பார்க்க வருகை தருவார்கள் என்பதால் ஆலயத்தை சுற்றி குடிநீர் கழிப்பறை போன்ற ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்தின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுமார் 292 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கார்த்திகை கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக கொரோனா கட்டுப்பாடால் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் கொரோனாவின் தளர்வுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.