வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவத்தில் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

0 478
Stalin trichy visit

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவத்தில் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்தின கிளி,பஞ்சாயுத மாலையுடன் ராஜ நடை போட்டு அர்ஜுன மண்டபம் புறப்பட்ட நம்பெருமாள் – “ரங்க ராஜா – ரங்க பிரபு” என்கிற பக்தர்கள் கூட்டத்தில் காட்சி தந்த திருவரங்கன்.

தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் எண்ணற்ற திருவிழாக்கள் வைபவங்கள் நடைப்பெற்றாலும் கூட மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா உள்ளது.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை திருநெடுந்தாண்டதுடன் துவங்கிய வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவில் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவமான இன்று
நம்பெருமாள் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி,பவள மாலை, முத்துச்சரம் மற்றும் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியபடி எழில் மிகு கோலத்தில் காட்சி அளித்தார்.

மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டபோது – ரங்க ராஜா – ரங்க பிரபு – கோவிந்தா என்கிற பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கம் இட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.

நம்பெருமாள் புறப்பாடுடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களும் வலம் வந்து அர்ஜுன மண்டபம் அடைந்தனர் – நாள்தோறும் காலை 200 நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் மாலை 200 பாசுரங்களும் வேத விண்ணப்பகர்களால் இங்கு விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.

வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது – முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்தின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் ஏறத்தாழ 290 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆலயத்தில் உள்ளே கார்த்திகை கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.