நகைகள் கையாடல் : வங்கி உதவி மேலாளர் மீது வழக்கு
திருச்சி, மார்ச் 7 திருச்சி கண்டோன்மெண்ட் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சிவானந்தம் (43). இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், – எங்கள் வங்கியின் ஸ்ரீரங்கம் கிளையில் கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18- ஆம் தேதி அமுதவல்லி என்பவர் தனது 117.4 கிராம் தங்க நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றார். இந்தநிலையில் எங்கள் வங்கியின் ஒரு கிளையில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை மற்ற கிளையில் பணியாற்றும் ஊழியர்களை கொண்டு அடிக்கடி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில் லால்குடி கிளை மேலாளர் கிருஷ்ணவேணி கடந்த ஜூன் மாதம் 18- ஆம் தேதி ஸ்ரீரங்கம் வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர், அமுதவல்லி அடகு வைத்து சென்ற 117.4 கிராம் நகையை கையாடல் செய்துள்ளார். இது வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணவேணியை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர், கையாடல் செய்ததை ஒப்பு கொண்டு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 40 கிராம் நகையை திரும்ப கொடுத்துள்ளார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.அதன்பேரில் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் பெரியசாமி, கிருஷ்ணவேணி மீது வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகிறார்.