குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ராசாம்பாளையத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ராசாம்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மண்ணச்சநல்லூரில் இருந்து எதுமலை செல்லும் சாலையில் உள்ள ராசாம்பாளையம் கடைவீதியில் திடீரென அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.