100 நாள் வேலை திட்டப்பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

0 408
Stalin trichy visit

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தாலுக்கா பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் 100 நாள் வேலையில் இரண்டு மாத சம்பள பாக்கியை கொடு,

அனைவருக்கும் வேலை கொடு,
சட்டப்படி 15 நாட்களுக்குப் பிறகு வழங்கும் ஊதியத்திற்கு வட்டி சேர்த்து கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிளைச் செயலாளர் சாந்தி தலைமையில்,கணேசன்,கலையரசி முன்னிலையில் 100 நாள் வேலை பணியாளர்கள் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர். அப்போது பணி வழங்கப்படும் எனவும் நிலுவையில் உள்ள ஊதிய பணம் இந்த வாரத்தில் கிடைக்க கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், மாநில குழு சந்திரன்,அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்,100 வேலை பணியாளர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.