பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
லால்குடி அருகே குமுளூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் 24 வயதான செல்வராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை பார்க்கச் சென்றுள்ளார்.
பின்னர் இரவு திருச்சியிலிருந்து புறப்பட்டு குமுளூரில் உள்ள வீட்டிற்கு தனது மோட்டார் பைக்கில் திருச்சி லால்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி திருவெறும்பூர் தாலுகா கும்பக்குடி மேட்டு தெருவை சேர்ந்த 28 வயதான ஆரோக்கியசாமி லால்குடியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்தை ஓட்டி வந்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மேலவாளாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் பைக் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜ் படுகாயமடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.