முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(60). இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதியில் இருந்து தினமும் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை வேனில் அழைத்து கொண்டு செல்வதும், பின்னர் பணிகள் முடிந்து மாலை வேலையாட்களை மீண்டும் வேனில் அழைத்து கொண்டு அய்யம்பாளையம் பகுதியில் இறக்கி விட்டு அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேனை நிறுத்திவிட்டு அங்கேயே தங்கி கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நிறுத்தியிருந்த வேனில் பிளாஸ்டிக் குழாய் மூலம் டீசலை மர்ம நபர்கள் சிலர் திருடி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் மர்ம நபர்கள் டீசல் கேன், குழாய் உள்ளிட்டவைகளை அங்கேயே விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சண்முகம் முசிறி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆறுமுகம்(28), ராம்குமார்(25), விக்னேஷ்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.