திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்கெட் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலம் அமைத்தால் கண்டோன்மெண்ட் அருகே உள்ள வீர முத்தரையர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சி கண்டோன்மெண்ட் அருகே வீர முத்தரையர் சங்கம் சார்பில் கண்டோன்மெண்ட் முத்தரையர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்மட்ட பாலம் களை கட்டுவது திருச்சியை அழகு மிகுந்த நகரமாக மாற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் காலம் காலமாக இங்கு உள்ள வரலாற்று சிறப்புமிக்க மன்னர் முத்தரையரின் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பார்கள் என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
திருச்சிக்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிலைக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இது ஒரு அடையாள போராட்டம் மட்டுமே, எங்களது அடுத்தகட்ட போராட்டம் மிகப் பெரியதாக இருக்கும்.