திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதி பயன்பாட்டிற்கு வந்தது

0 419
Stalin trichy visit

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். நோயாளிகளின் உறவினர்கள் இரவுநேரத்தில் மருத்துவமனை வளாகத்திலும், நடைபாதைகளிலும் படுத்து உறங்கி வந்தனர்.

இதனை தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த விடுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அருகருகே தனித்தனி அறைகள் உள்ளன.

ஆண்களுக்கான அறையில் 28 படுக்கைகளும், பெண்களுக்கான அறையில் 20 படுக்கைகளும் உள்ளன. இந்த விடுதியில் தங்குபவர்கள் ஆதார்கார்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதற்கான சீட்டு ஆகியவற்றை காண்பித்து தங்க முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டுகளாக விடுதி மூடப்பட்டு இருந்தது.

தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு புதிதாக படுக்கைகள் போடப்பட்டு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முன்பு இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டு வந்த விடுதியில் தற்போது ஒருநாள் இரவு தங்க ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது இங்கு தங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.