லாரியின் பின்புறம் மோதிய ஆம்னி பேருந்து : 2 பேர் உயிரிழப்பு
திருச்சி, ஏப்.2 திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பேருந்தின் முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் என இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் உயிரிழந்த 2 பேர் உடல்களையும் மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.