கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு 11 ஆண்டுகள் சிறை : புதுகை நீதிமன்றம் தீர்ப்பு
புதுக்கோட்டை, ஜூலை 31 கஞ்சா கடத்திய வழக்கில் ஒரு நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,20,000 அபராதமும், மற்றொரு நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கடந்த 21.9.2021 ஆம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் வார சந்தை பகுதியில் வாகன சோதனை செய்த போது TN 72 A 2567 என்ற ஈச்சர் லாரியை மடக்கி பிடித்தனர். அந்த லாரியில் ஆறு சாக்கு பைகளில் மொத்தம் 132 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான தேனி மாவட்டம் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த மூவேந்தரன் (31) கரூர் வேலாயுதம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரபு (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இது தொடர்பாக திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற எண். 20/2021 u/s 8(c)r/w 20(b)(i)(C), 25 of NDPS Act இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் துணைக் கண்காணிப்பாளர் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி புலன் விசாரணை முடித்து கடந்த 06.2.2022 ஆம் தேதி அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது புதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று 30.7.2024 தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவேந்தரனுக்கு போதைப்பொருள் தடுப்பு சட்ட இரு பிரிவுகளின் கீழ் தலா பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதமும், பிரபுவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் மூவேந்தரன் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மற்ற நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து மற்றும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த புலன் விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.