நகரில் அதிக விபத்துகள் நிகழும் 9 இடங்களை கண்டறிந்து போலீசார் தீவிர கண்காணிப்பு

0 459
Stalin trichy visit

திருச்சியில் சாலை விபத்து சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நகரில் அதிக விபத்துகள் நிகழும் 9 இடங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த இடங்களில் வாகன சோதனை, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நகர எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த விபத்துகள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து, விபத்துகள் அதிகம் நிகழும் 9 இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, சென்னை புறவழிச் சாலையையொட்டிய சஞ்சீவி நகர் சந்திப்பு, நகர எல்லையையொட்டிய ஒய் சாலை சந்திப்பு, கொள்ளிடம் பைபாஸ் சந்திப்பு, எடமலைபட்டிபுதூர் சந்திப்பு, கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டிய எஸ்.ஐ.டி. ஜங்சன், எடமலைப்பட்டிபுதூர் -மதுரை பைபாஸ் சந்திப்பு உள்ளிட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை. சாலையை கடக்கும்போது, விதிகளை பின்பற்றாமல் திடீரென வாகனத்தை திருப்புவதால் அதிக விபத்துகள் நேர்கின்றன என்றனர். திருச்சி நகரில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் விரிவடைந்து வருகின்றன.

இதேபோல், வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருவதால், போக்குவரத்தை ஓழுங்குபடுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து திருச்சி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், விபத்துகள் தொடர்பான சம்பவங்களை ஆராய்ந்து, அதிக விபத்துகள் நிகழும் 9 இடங்களை அடையாளம் கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களில் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். இந்த 9 இடங்களிலும் வாகன தடுப்புகள் வைக்கவும், மின்விளக்கு வசதியை மேம்படுத்தவும், பழுதடைந்த சாலையை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எச்சரிக்கை பலகைகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.